Followers

Powered by Blogger.

'

உள்ளம் பெருங்கோயில்... ஊனுடம்பு ஆலயம்' என்றெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அப்படி ஆலயமாகப் பொலிவுற வேண்டிய நம் உடம்பு சுணக்கமுற்றால் என்னாவது? பழக்கவழக்கங்கள்தான் நம் உடம்பு சுணக்கமுறுவதற்குக் காரணம் என்றால், நம்மால் மாற்றிக் கொள்ள இயலும். கர்மவினை காரணம் என்றால், அவற்றை எங்கே தொலைப்பது? உள்ளத்துப் பிணிகளைப் போக்குபவை ஆலயங்கள். அதே நேரம், நம் உடற்பிணிகளுக்கும் நல்மருந்தாகி, நம் பிணிகளைப் போக்கி, ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்களும் நிறைய உண்டு நம் தேசத்தில்! அந்தத் தலங்களை நாடிச் சென்றால், நம் பிணிகள் நீங்கும்; வாழ்க்கை நலமுறும். இப்படி, நமக்கெல்லாம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும் ஆலயங்களில் ஒன்று ஊட்டத்தூர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில். ராஜராஜ சோழன் வழிபட்டு நோய்நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் பலப்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு சுத்தரத்தினேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி.இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்! ஆசியாவிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். கொள்ளை அழகுடன் அருட்காட்சி தரும் இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இதுகுறித்தும், சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதற்காக இங்கே செய்யப்படும் பரிகார பூஜை பற்றியும் ஆலய அர்ச்சகர் நடராஜ குருக்களிடம் கேட்டோம். ‘‘பஞ்சநதனக் கல்லால் ஆன இங்குள்ள நடராஜர் பல்வேறு வகையான நோய்களையும் போக்கக்கூடிய வரப்பிரசாதி. குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்பவர். இதற்கு நேரடி சாட்சியாக, இங்கே வந்து வழிபட்டு, தங்கள் சிறுநீரகப் பிரச்னையிலிருந்து விடுபட்டு, அனுபவபூர்வமாகப் பலன் பெற்ற பலரை நீங்கள் இங்கே பார்க்கலாம்’’ என்றவர், பரிகார பூஜை செய்யும் முறை குறித்தும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். ‘‘சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ அளவில் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர், அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள) ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடவே கெடாது என்பது சிறப்பு. வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, அதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டு, அந்த தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம். பெண்கள் மட்டும் வீட்டு விலக்காகும் நாட்களில், இந்தத் தீர்த்தத்தைப் பருகக் கூடாது. 48 நாட்கள் முடிந்ததும், அந்த வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இங்கு வந்து வேண்டிக்கொண்டு தங்கள் நோய் நீங்கப்பெறுவதை அனுபவத்தில் காணமுடிகிறது. 48 நாட்கள் முடிந்ததும், அவர்கள் மறுபடியும் கோயிலுக்கு வந்து, நெஞ்சம் நெகிழ நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்’’ என்று சிலிர்ப்புடன் விவரித்தார் நடராஜ குருக்கள். சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து தரும் மருத்துவன் இத்தலத்தின் இறைவனான ஆடல்வல்லான். ஒருமுறை, நாமும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஐயன் சுத்த ரத்தினேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வரம் பெற்று வருவோம். Padithidam :https://www.vikatan.com/spiritual/temples/68912-pray-to-oottathur-natarajar-to-solve-problems-regarding-kidney

| edit post

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates