Followers

Powered by Blogger.

வாசி யோகப் பயிற்சி

Posted by ss Sunday, November 10, 2013


ஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் உறைவதாகச் சொல்வர். ஓகம் (யோகம்) பயிற்றுவிக்கும் ஆசான்கள், குருமார்கள் இந்த குண்டலினி ஆற்றலை முதுகந்தண்டு வழியே மேலே ஏற்றிக் கொண்டு போய் உச்சந்தலையில் அமைந்த பதின்நூறு ஆரச்சக்கரத்தில் (ஸஹஸ்ராரம்) சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் சொல்கின்றரே தவிர அதை மீண்டும் அப்படி கீழே கொண்டு வந்து மூல அடிப்படையிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று சொல்வதேயில்லை. அச்சாகும் ஓக நூல்களிலும் இந்தக் குறை உள்ளதை வாசிப்பவரால் அறியமுடியும். இது ஏனென்றால் அந்த ஆசான்களுக்கு, குருமார்களுக்கு அது பற்றி தெரியாமை ஒரு காரணம் எனலாம், மற்றொன்று ஒருவரது ஓக அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமே எனலாம். ஓகத்தை பழகுவோர் தம் குண்டலினி ஆற்றலை மேலே ஏற்றி பதின்னூறு ஆரச்சக்கரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவரது முயற்சியைப் பொருத்து 12 முதல் 30 ஆண்டுகள் வரை பிடிக்கின்றன. இதனாலேயே பலர் ஓகத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக ஆன்மீக முன்னேற்றம் தராத சடங்கு, மதம் ஆகியவற்றை காலம், எளிமை கருதி கைக் கொள்கின்றனர்.
இந்த நீண்ட கால ஓகப் பயிற்சியைத் தவிர்த்து சில நாள்களில் அல்லது சில மாதங்களில் அந்தக் குண்டலினியை பதின்னூறு ஆரச்சக்கரத்திற்கு கொண்டு போவதோடு அல்லாமல் அதை மீண்டும் கீழேயுள்ள அதன் மூலஅடிப்படையிலேயே கொண்டு வந்து சேர்க்கவும் அமைந்த எளிய ஓகப் பயிற்சி தான் இந்த வாசி யோகம் எனும் காற்றுப் பயிற்சி. இதை தமிழ் நாட்டு சித்தர்கள் பன்னூற்றாண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் ஒரு இயக்கம் நடத்தி மக்களிடையே இந்த வாசி ஓகத்தைக் கொண்டு செல்லாமல் தம்மை  அண்டிவந்த தம் மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர். அந்த மாணவர்கள்  தம் இசைவைப் பெறாமல் வாசி ஓகத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்தம் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று எச்சரித்து மக்களிடம் பரவாமல் தடுத்துவிட்டனர். இது ஏனென்றால் இந்த பயிற்சியால் கிட்டும் சித்துகளை பக்குவமற்ற பழகுநர் தம் சொந்த நலனுக்காகப்  பயன்படுத்தி தமக்கும், பிறருக்கும் கேட்டை பயக்குவர் என்பதால் எனலாம். மக்களுடைய எல்லா நல்ல, தீய செயல்களுக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே கட்டுப்பாட்டாளன் (controller) என்பதால் சித்தர்களின் இந்த அச்சம் தேவையற்றது. தமிழ்ச் சொல் ஆண்டவன் என்பதற்கும், சமற்கிருதத்தில் ஈஸ்வர என்பதற்கும் கட்டுப்பாட்டாளன் என்பதே பொருள்.
இனி, வாசி ஓகம் பழகும் முறையை குறித்து தெளிவான விளக்கமும், அதன் பின் அதைப் பழகுபவருக்கு அதனால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களும் என்னென்ன என்பதும் சொல்லப்படும். வாசிஓகத்தில் அடிப்படையானது காற்று. வாசி என்றால் காற்று எனப் பொருள். இதை பழக விரும்பவர் எட்டு அகவைக்கு மேற்பட்டவராக,  உடல் வளைவதற்கு இயன்றவராக இருந்தால் போதும். பிற ஓக, ஊழ்க (தியான) பயிற்சி முறையில் உள்ளது போல் சைவ உணவே உண்ணவேண்டும் என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடு ஏதும் இதில் இல்லை. ஒரு நாளில் ஒரேஒரு முறை மட்டும் இதைப் பழகினால் போதும். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அமைதியான மன நிலையில் இதைப் பழுகுவது சாலவும் நன்று.  

பயிற்சி முறை:

வாசிஓகம் பழகுநர் முதலில் ஒரு தடியான விரிப்பை தரைமேல் விரித்துக் கொள்ள வேண்டும். இது முட்டியில் வலி ஏற்படாமல் தவிர்க்கும்  உடலை வளைத்து பழக வேண்டி உள்ளதால் தளர்த்தியான ஆடையே மிகவும் ஏற்றது. முதலில் விரிப்பின் ஒரு கோடியில் முட்டி போட்டு அமர்ந்து இடது கால் கட்டை விரல் மேல் வலது கால் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி புட்டத்தை கால்களின் மேல் இருத்தி அமர வேண்டும். பின்பு, வலதுகைப் பெருவிரலால் வலது மூக்குத் துளையை மூடி  இடது மூக்குத் துளை வழியாகக் காற்றை மெல்ல மெல்ல முழுமையாக இழுத்து பின்பு அக்காற்றை உள்ளே நிறுத்தி வைக்காமல் உடனேயே இடது மூக்குத் துளையை நடுவிரலால் மூடி வலது மூக்குத் துளை வழியாக உள்ளே உள்ள காற்று முழுவதையும் வெளியே விட்டுவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அதே வலது மூக்குத் துளை வழியாக காற்றை மெல்மெல்ல உள்ளுக்கிழுக்க வேண்டும். காற்றை இழுத்த பின் இப்போது வலது மூக்குத் துளையை மூடிவிட்டு இழுத்த காற்று அத்தனையையும் மெதுவாக இடது மூக்குத் துளை வழியாக முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். இது மூக்கில் உள்ள காற்றடைப்பை அகற்றி இனி செய்ய இருக்கின்ற வாசிஓகப் பயிற்சியில் தடை ஏதுமின்றி மூக்குத் துளையில் காற்று போய் வருவதற்கு உதவிசெய்யும். (கீழே உள்ள படம் ஒரு தெளிவிற்காக)
   

இனி, முட்டியிட்டு அதே உட்கார்ந்த நிலையில் இரு தொடைகளின் மேல் கைகளை வைத்து இடக்கால் பெருவிரலை வலக் கால் பெருவிரலால் அழுத்தியபடி முதுகை நேராக நிமிர்த்தி இருக்கவேண்டும். பின்பு வாயை முன்குவித்து காற்றை மெல்லிதாக 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும். காற்று உள்ளே செல்லும் போது அடிவயிறு இயல்பாகக் குறுகி மார்பு விரிவடையும். இப்படி முக்கால் அளவிற்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கும் போது தலையை முன்னோக்கி வளைத்தபடியே தொடை மீதுள்ள இரு கைகளையும் தரையோடு தேய்த்தாற்ப்போல் நீட்டி தரையில் கையை பதித்தபடி குனிந்து நெற்றியால் தரையைத் தொடவேண்டும்.      நெற்றியால் தரையைத் தொடுவதற்கு வளைகின்ற போது வயிறு அப்படியே மடிந்து உள்நோக்கி சுருங்கி வளையும். வயிறு வளைந்தால் அவர் பயிற்சியை முறையாகச் செய்கின்றார் எனக் கொள்ளலாம். குனியும்போது உடலும் முன்னோக்கி நகரும். நெற்றியால் தரையைத் தொடும் வரை காற்றை 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும்.
கீழே குனிந்து நெற்றியால் தரையைத் தொடும் போது மட்டும் வாயை லேசாக  திறந்து  'ஆ' என்று காற்றை வெளியே விடவேண்டும். ஆனால் முழுமையாக விடவேண்டும்  என்று இல்லை. அதைத் தொடர்ந்து இரு கைகளையும் தரையை ஓட்டினார் போல் தொடையை பின்நோக்கி இழுக்க வேண்டும். கைகளை  இழுக்கின்றபோது மீண்டும் வாயைக் குவித்தபடி  'ஊ' என்று காற்றை உள்ளுக்கிழுத்தபடியே தோளைத் மேலே தூக்காமல் கழுத்தையும் சேர்த்தே  பின்னோக்கி இழுத்து நேராக நிமிர்ந்து இரு கைகளையும் தொடைகளின் மேல் இருத்த வேண்டும். இப்படி குனிவில் இருந்து மெல்ல எழுந்து நிமிரும் வேளையில் காற்றை முக்கால்வாசி இழுத்திருப்பீர்கள். மீண்டும் முன்போல் காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே தொடைமேல் உள்ள கைகளை முன்னோக்கி நகர்த்தி தரையைத் தேய்த்தாற் போல குனிய வேண்டும். நெற்றி தரையைத் தொடும் நேரத்தில் மட்டும் சிறிது வாய் திறந்து காற்றை 'ஆ' என்று விடவேண்டும். பின் மீண்டும் இரு கைகளையும் தொடையை நோக்கி இழுக்க வேண்டும். தோளை உயர்த்தாமல் கழுத்தையும் பின்னே இழுத்து உடலை நிமிர நிறுத்த வேண்டும். பின்னோக்கி இழுக்கின்ற போது வாயைக் குவித்து காற்றை மெல்லமாக 'ஊ' என்று இழுக்கவும் வேண்டும். இதனால் காற்று உடல் முழுவதும் நிறையும். உடல் காற்றாலேயே நிறைந்து போகும். உடல் முழுதும் வியர்க்கும். இப்படியே 30 நிமிடங்கள் காற்றை உள்ளுக்கிழுத்தும் விட்டும் வரும் பயிற்சியால் காற்று கழுத்து வரை நிரம்பிவிடும். (காற்றை விரைந்து நிரப்ப சில நாள்களில் இந்த குனிந்து நிமிர்வதை வேகமாக செய்யவேண்டும்). 
காற்று கழுத்து வரை நிரம்பிய பின் குனிந்து எழுவது கடினமாகிப் போகும். அப்போது முதுகு நிமிர்ந்த நிலையிலேயே கண்ணைமூடி சிதறாத கவனத்துடன் வலக்கண் பாப்பாவில் மனத்தைக் குவித்தபடி வாயைக் குவித்து காற்றை 'ஊ' என்று உள்ளுக்கு முழுமையாக இழுக்க வேண்டும் பின் வாயை சிறிதளவே  திறந்து  'ஆ' என்று சிறிதளவே காற்றை விட வேண்டும். இப்படியே சில நிமிடங்கள் காற்றை இழுப்பதும் விடுவதும் நிகழ்த்திவந்தால் காற்று கண் வரை நிரம்பும். அதன் பின் கண்ணைத் திறந்து ஒரு கண்ணாடியில் தன் வலக்கண் பாப்பாவை மட்டும் முறைத்துப் பார்க்கவேண்டும். இதனால் அப்போது கண்ணில் நீர் கசியும். கண்ணீர் நின்றதும் காற்று வலக்கண்ணுக்கு மேலே ஏறுவது  தெரியும். காற்று அப்படியே ஏறிச்சென்று உச்சந்தலையில் உள்ள பதின்னூறு ஆரச்சக்கரதில் நுழையும். காற்று நுழைவதை உற்று கவனிப்பதால் உச்சந்தலையில் குயவன் சக்கரம் சுழல்வது போல் ஒரு சக்கரம் அல்லது தாங்கி (bearing) சுழல்வதை உணரமுடியும். அங்கேயே எண்ணம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தால் அருவி போல் நீர் வடியும். இது நீரில்  குளிப்பது போல இருக்கும். இதை அந்த வாசிஓகப் பழகுநர் மட்டுமே அனுபவித்து உணர்வார். மற்றவர் கண்களுக்கு இது தெரியவே தெரியாது. இதைத் தான் காசியில் குளிப்பது என்றனர் ஓகியர். இதில் குளிப்பவர்க்கு மறுபிறப்பு கிடையாது என்பர். இந்த வாசிஓகப் பயிற்சியில்  ஈடுபடுபவர் உள்ளுக்கு இழுத்து விடும் காற்றை மட்டுமே கவனிக்க வேண்டும் வேறு சிந்தனையில்  ஈடுபடக் கூடாது. காற்று உடலின் உள்ளே எங்கே நுழைகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.     
இந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளாவட்டத்தில் குனிந்து விழுந்து எழுவதை தவிர்த்து நிமிர்ந்த நிலையிலேயே வாய்வழியாகவே காற்றை இழுத்தும்  வாய்வழியாகவே விட்டும் பழகிக்கொள்ளலாம்.     
இன்னும் சில நாள்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர வாசிஓகப் பழகுநரின் தலை உச்சியில் (பதின்னூறு ஆரச்சக்கரத்தில்) கவனம் மேம்பட்டுவரும். அந்த சிதறாத கவனத்தால்  அக்காற்று பனியாக மாறி பழகுநருக்கு பனிக்காற்று உணர்வை ஏற்படுத்தும் அதனால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கும். இதில் வெப்பக் காற்று குளிர் காற்றாக மாறுகிறது. இதன்பின் கட்டி கட்டியாகத் தொங்கும் பனியாக அது வளர்ச்சி பெறும். இதை 'வெள்ளி பனித்தலையர்'  நிலை எனலாம். இதை அந்த வாசிஓகியால் மட்டுமே அனுபவிக்க முடியும் மற்றவருக்கு இது சிறிதளவும் தெரியவராது.  இந்த நிலையை கடந்தால் சில நாள்களில் பதின்னூறு ஆரச்சக்கரம் தானாகவே திறக்கும். அப்போது வான்மண்டலமே அங்கு தெரியும். பின் காற்று அதன்வழியே வெளியே போகும். அண்டவெளிக் காற்று அந்தத் துளை வழியாக இறங்கும். இதுவே பத்தாவது வாசல் காற்று எனப்படும். இங்கு தான் நான் என்ற தனியாள் உணர்வு அந்த சுழியத்தோடு (cosmic entity)  இணைகின்றது. அப்போது நானும் அவனும் ஒன்று என்ற உணர்வு மேலிடும். இதுவே துவைதம் எனப்படும் இருமை நிலை ஆகும். இதாவது, இறைவனும் இருக்கிறான் நானும் இருக்கிறேன் என்பது.     
இந்த இருமை நிலையை உணரும் போது நீல நிறம் தெரியும் என்பது மட்டும் அல்ல கண்ணால் காணும் புற உலகப் பொருள்கள் யாவும் நீலநிறமாகவே காட்சியளிக்கும். அந்த நீல நிறத்தை பதின்னூறு ஆரச்சக்கரத்தின் வழியாக கீழே உடலுள் இறக்க வேண்டும். இதற்கு பதின்னூறு ஆரச்சக்கரத்திலேயே கவனத்தை குவிதிருந்தால் போதும் காற்றை இழுத்து விடத் தேவை இல்லை. இந்த நீல நிறத்தின் ஊடாகவே இறை மூலஅடிப்படையில் (supreme muladhara) இருக்கும் ஐம்பெரும் பூதங்களையும் ஒவ்வொன்றாக உடலுள் ஈர்க்க வேண்டும். இதை ஈர்க்கும் போது முட்டிபோட்டு வாசிஓகம் செய்வது போல் உட்காரத்தேவையில்லை. அப்போது  இயல்பாக உட்கார்ந்து கொண்டு வலது கால் மேல் இடது காலை வைக்க வேண்டும் அல்லது தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடக் காலை வலக் காலின் மேல் போட்டு உட்காருவது காற்றை கீழ் நோக்கி செலுத்தவும் உடலைக் குளிருட்டவும் செய்கின்றது.  இந்த நிலையில் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து விடுவதை நிறுத்த தேவையில்லை. மூக்கு வழியாக இயல்பாக மூச்சை இழுத்து விட்டால் போதுமானது. இந்த பயிற்சியை சிலநாள்கள் தொடர்ந்தாற்போல் செய்தால் அந்த இறை மூலஅடிப்படையை நம்முடைய மூலஅடிப்படையில் கொண்டு வந்து சேர்க்க முடியும். இடையில் கிட்டும் சித்துக்களில் ஈடுபாடு உண்டாகுமானால் மேற்சொன்ன முன்னேற்றம் கிட்டாமல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். ஆதலால் அவற்றை நாடவே கூடாது. இவ்வாறு இறை மூலஅடிப்படையை சேர்த்தால் ஒருவர் ஐம்பெரும் பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதோடு முக்காலத்தையும் உணர்ந்தவர் ஆகின்றார். இந்த நிலையில் அந்த வாசிஓகப் பழகுநர் "அவனே நான், நானே அவன்" என்ற உணர்வை அடைகின்றார். இதுவே "நான் கடவுள்" எனும் "அஹம் பிரம்மாஸ்மி" என்ற உபநிடதக் கருத்துநிலை எனப்படுகிறது. இந்த நிலைதான் இரண்டன்மை எனும் அத்துவைதம் ஆகும். இது தான் உண்மையில் வீடுபேறு எனும் மோட்சமுமாகும். மோட்சம் என்று தனியே வேறொரு இடம் இந்தப் புடவியில் (universe) இல்லவேயில்லை. ஆகவே வீடுபேறு என்பது தன் மூலஅடிப்படையுடன்  இறை மூலஅடிப்படையை சேர்த்தால் மட்டுமே வாய்க்கும்.
இப்படியாகப்பட்ட உயர்நிலையை எய்தியவர் மனநாட்டம் காரணமாக ஐம்பெரும் பூதங்களினால் ஆன உலகியலில் ஈடுபாடு கொள்வாரானால் இறைஆற்றல் அவரைவிட்டு நீங்கப்பெற்று அவரது குண்டலினி மீண்டும் கீழே இறங்கிவிடும். அப்போது அவர் மற்றவர் போல் இயல்பான மனிதராக ஆகிவிடுவார். இதை அவரால் நன்றாக உணரமுடியும். ஆனாலும் பயிற்சியின் வாயிலாக மீண்டும் அந்த உயர்நிலையை அவரால் எளிதில் எய்தமுடியும். நல்ல தேர்ச்சி ஏற்பட்ட பின் குனிந்து வளையாமல் இயல்பாக அமர்ந்து வாய்வழியாகவே காற்றை 'ஊ' என இழுத்தும் 'ஆ' என விட்டும் வாசிஓகத்தை பழக முடியும்.    
பழனிமலைக் கோவிலின் திருச்சுற்றில் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டுள்ள அகத்தியர் பாடல் ஒன்றில் உச்சந்தலையில் சக்கரம் சுழல்வது, அருவி போல் நீர் கொட்டுவது, பனிக்குளிர் வீச்சு, பனிகட்டியாக ஆதல், நீல நிறக்காட்சி ஆகியன பற்றிய குறிப்பு மேற்சொன்னவை யாவும் உண்மை என்பதற்கு ஒரு சான்றாகும்.  மக்களைப் பிளவுபடுத்தும் மதத்தை விட்டொழித்து உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை எல்லோரும் நாடி அடையவேண்டும் என்ற நன்னோக்கத்தில் தான் இதுகாறும் கமுக்கமாக சொல்லித்தரப்பட்ட இந்த எளிய வாசிஓகத்தை பொதுப்பட வழங்கியுள்ளேன். இந்த வாசியைப் பழகி இந்த அனுபவங்களை எல்லாம் முழுதுமாகப் பெற்று 'நானே அவன், அவனே நான்' என்ற நிலையையும் எய்தியவர் எடுத்துரைத்த (narrate) செய்திகளே இங்கு தரப்பட்டுள்ளன. 

http://tamilnanbargal.com/yoga/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

13 comments

  1. Healers Hub Says:
  2. நன்றி

     
  3. Gk.Murugan Says:
  4. THANKS

     
  5. அற்புதமான பதிவு. மிக பெரிய ரகசியம் வாசி யோகம்.நன்றி ஐயா.

     
  6. Sivan Says:
  7. நன்றி

     
  8. Unknown Says:
  9. தேடிய பொருள் கிடைத்தது நன்றி

     
  10. நல்லவிளக்கம். நன்றி

     
  11. நல்வ விளக்கம் நன்றி

     
  12. தேங்க்ஸ் for you

     
  13. நன்றி

     
  14. yoga collective infotech

    யோகாசனங்கள்
    I like your post. This post really awesome and very helpful to me. Please keep posting good contents. Thank you

     
  15. dr j Says:
  16. I have arthritis .I cannot sit on my knee..can I do it normally sitting position

     
  17. mohan Says:
  18. ஆத்ம நமஸ்க்காரம் மிக்க நன்றி ஐயா
    ஓம் நமசிவாய..

     
  19. RANJITH Says:
  20. அருமை

     

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates